தேடல்

திரு.வி.க., நகரில் மேயர் ஆய்வு குடியிருப்போர் முற்றுகை

சென்னை

: திரு.வி.க., நகரில், அடிப்படை பிரச்னைகள் குறித்து, மேயர் சைதை துரைசாமி

ஆய்வு செய்த போது, பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

திரு.வி.க., நகர் மண்டலத்தில், 64 முதல் 78 வரை, மொத்தம், 15 வார்டுகள்

உள்ளன. இதில், 68 வது வார்டில், கழிவுநீர் அடைப்பு, தெளிவற்ற குடிநீர்

உள்ளிட்ட பிரச்னைகள், தொடர்கதையாக நீடிக்கின்றன.நடவடிக்கை எடுக்க கோரி,

இம்மாதம் முதல் வாரத்தில், பொதுமக்கள் பலமுறை சாலை மறியல் செய்தனர்.

இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று,

திரு.வி.க., நகரில், மரிய நாயக்கன் தெரு, நீலம் தோட்டம், ஜமாலியா குடிசை

மாற்று குடியிருப்பு பகுதிகள், சபாபதி முதலி தெரு, தீட்டித்தோட்டம்

உள்ளிட்ட இடங்களை, ஆய்வு செய்தார். சபாபதி முதலி தெருவில் மக்கள், மேயரை

முற்றுகையிட்டனர். பல மாதங்களாக கழிவுநீர் தேங்குதல், கலங்கலான குடிநீர்

குறித்து, மேயரிடம் புகார் அளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

என, மேயர் உறுதியளித்தும், பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. இதனால்,

குடிநீர் வாரிய அதிகாரிகளை அழைத்த மேயர், பிரச்னைகளை விரைவில் சரிசெய்ய

வேண்டும் என, அவர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வில், மேயர் பொதுமக்களிடம்

கூறியதாவது:மக்களின் குறைகளை, அதிகாரிகள் உடனுக்குடன் சரி செய்து தர

உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவுநீர், கலங்கலான குடிநீர் உள்ளிட்ட,

பிரச்னைகளுக்கான காரணம் குறித்து, ஆய்வு செய்து எதிர்காலத்தில், இந்நிலை

தொடராமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், அதிகளவில் கழிவுநீர்

தேங்கும் இடங்களில், தனியாக கழிவுநீரேற்று நிலையம் அமைப்பது குறித்து,

விரைவில் முடிவு எடுக்கப்படும்.