தேடல்

லண்டனில் கட்டடத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்து: பயங்கரவாதிகள் செயலா?

லண்டன்: மத்திய லண்டன் பகுதியில் கட்டட பணியில் இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம். 16 அலுவலகம் இருப்பதால் இது பயங்கரவாதிகளின் செயலாக இருக்குமோ என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் மத்திய லண்டன் பகுதியில் தேம்ஸ் நதிக்கரையின் தெற்கு பகுதியில், கட்டடத்தின் மீது இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதியது. இதில் தீப்பிடித்த அந்த ஹெலிகாப்டர் சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் இருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து லண்டனின் முக்கிய பகுதியான வாக்ஸ்ஹால் பகுதியில் நடந்துள்ளது. இதன் காரணமாக வாக்ஸ் ஹால் மற்றும் வாட்டர்லூ ஆகிய இடங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் சாலையில் எரிந்து கொண்டிருந்ததால் அப்பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது.

பயங்கரவாதிகள் செயலா? விபத்து நடந்த பகுதியில் இங்கிலாந்து நாட்டின் உளவு அமைப்பான எம். 16 அலுவலகம் உள்ளது. இதைத்தொடர்ந்து இச்சம்பவம் பயங்கரவாதிகளின் செயலாக இருக்குமோ என்ற கண்ணோட்டத்தில் தற்போது விசாரணை துவக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஜேம்ஸ்பாண்ட் படம் ஒன்றில், எம். 16 தாக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் போன்ற ஒரு செயலாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.