தேடல்

லாரி - கல்லூரி பஸ் மோதல் : இருவர் பலி; 10 பேர் படுகாயம்

அவிநாசி: திருப்பூர் அருகே, கல்லூரி மாணவர்கள் வந்த பஸ், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவர் உயிரிழந்தனர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம், திருச்சூர், ராயல் பொறியியல் கல்லூரி மாணவர், 16 பேர் மற்றும் மாணவியர், 34 பேர், தனியார் சொகுசு பஸ்சில், கல்விச் சுற்றுலா சென்றனர். நான்கு நாட்களுக்கு முன், திருச்சூரிலிருந்து கிளம்பிய அவர்கள், தமிழகத்தில் கொடைக்கானல், ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களை பார்த்து, பெங்களூரு சென்றனர்.
அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, திருச்சூர் நோக்கி பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். திருச்சூரை சேர்ந்த, ரித்திஷ், 28, பஸ்சை ஓட்டினார். உடன் உதவியாளர் கண்ணன், 30, முன்புறம் அமர்ந்திருந்தார்.
நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், திருப்பூர் மாவட்டம், சரவணபுரம் அருகே பஸ் சென்ற போது, காட்டன் பேல்கள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் எதிர்பாராமல் மோதியது. இதில், பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. டிரைவர் ரித்திஷ் மற்றும் கண்ணன் இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; பஸ்சில் சென்ற மாணவர்களில், 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.