தேடல்

வங்கிகளுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு:வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும்

மும்பை:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்களை, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. மேலும், ரொக்க இருப்பு விகிதத்தையும், இதே அளவிற்கு குறைத்து, 4 சதவீதமாக குறைத் துள் ளது.ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ்,நேற்று, மூன்றாவது காலாண்டு நிதி ஆய்வுக் கொள்கையை வெளியிட்டார்.


ரொக்க இருப்பு விகிதம்:இதில், வங்கிகள் குறுகிய கால அடிப்படையில், ரிசர்வ் வங்கியிடமிருந்து, வாங்கும் கடனுக்கான "ரெப்போ ரேட்', 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.75 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதே போன்று, வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு வழங்கும் கடனுக்கான, "ரிவர்ஸ் ரெப்போ ரேட்', 0.25 சதவீதம் குறைக்கப் பட்டு, 6.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில், குறிப்பிட்ட அளவிற் கான தொகையை, ரிசர்வ் வங்கியில், இருப்பு வைக்க வேண்டும்.


இதற்கு, ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.,)என்று பெயர். இந்த சி.ஆர்.ஆர்.,விகிதமும்,0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 4 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், வங்கிகளின் புழக்கத்திற்கு, கூடுதலாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்.நாட்டின் பணவீக்கம், மிகவும் அதிகமாக இருந்ததையடுத்து,கடந்த ஒன்பது மாதங் களாக, ரிசர்வ் வங்கி,"ரெப்போ' வட்டி விகிதங்களை குறைக்காமல் இருந்தது.இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில், நாட்டின் பணவீக்கம்,7.18 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த அக்டோபரில், 7.45 சதவீத மாகவும், நவம்பரில், 7.24 சதவீதமாகவும் காணப்பட்டது.


ரெப்போ' வட்டி விகிதம் 7.75 சதவீதமாக குறைப்பு
ரிவர்ஸ் ரெப்போ' 6.75 சதவீதமாக இருக்கும்
ரொக்க இருப்பு விகிதம் 4 சதவீதமாக குறைப்பு
வங்கிகளின் புழக்கத்திற்கு ரூ.18 ஆயிரம் கோடி கிடைக்கும்
பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும்
பணவீக்கம் 6.8 சதவீதமாக குறையும்


வாகன கடன்:"ரெப்போ ரேட்' விகித குறைப்பு நடவடிக்கை, உடனடியாக அமலுக்கு வருவதாகவும், சி.ஆர். ஆர்., குறைப்பு, பிப்., 9ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், ரிசர்வ் வங்கி, தெரிவித்து உள்ளது. வங்கிக ளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


பொருளாதார வளர்ச்சி:மத்திய அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.குறிப்பாக,சில்லரை வர்த்தகம்,விமான சேவை, தகவல் ஒளிபரப்பு, காப்பீடு உள்ளிட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டை கவரும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், அதிகளவில் அன்னியச் செலாவணி வருவதுடன், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் வலுவடை யும். நடப்பு கணக்கு மற்றும் நிதி பற்றாக்குறையை குறைக்கும் வகையிலும், மத்திய அரசு, நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


இருப்பினும், ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதி கரித்து வருகிறது. இது, இடர்பாடு அளிப்பதாக உள்ளது.நடப்பு நிதி யாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும். இது, முதல் மதிப்பீட்டில், 5.8 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக் கப்பட்டிருந்தது.நடப்பு நிதியாண்டில், மார்ச் மாத இறுதியில், நாட்டின் பொதுப் பணவீக்கம், 6.8 சதவீ தமாக குறையும் என, ரிசர்வ் வங்கி மறு மதிப்பீடு செய்துள்ளது.


இது, முதல் மதிப்பீட்டில், 7.5 சதவீதமாக இருக்குமென, தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத் திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை படிப்படியாக குறையும் என, சுப்பாராவ் தெரிவித்தார்.


இது குறித்து திட்ட கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது:வங்கிகளுக்கான வட்டி விகித குறைப்பு, சரியான நேரத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்., குறைப்பால், வங்கிகளின் புழக்கத்திற்கு அதிகளவில் நிதி கிடைப்பதுடன், கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குனர் என்.சேஷாத்ரி கூறுகையில், "வங்கிகளுக்கான வட்டி குறைப்பால், வழங்கப் படும் கடன்கள் மற்றும் டெபாசிட்டு களுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீத அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது' என்றார்.


தொழில் துறை:வங்கிகளுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருந்ததால், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. இந்நிலையில், வட்டி குறைப்பால், தொழில் துறை நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு அதிகளவில் கடன் வாங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கியின், அடுத்த மத்திய காலாண்டு ஆய்வறிக்கை, வரும் மார்ச் 19ம் தேதியும், ஆண்டு நிதிக் கொள்கை, மே 3ம் தேதியும் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.