தேடல்

வங்கியில் தங்கம் வாங்க "பான்' கார்டு: ரிசர்வ் வங்கி பரிசீலனை

மும்பை:வங்கிகளில், அதிக தொகைக்கு தங்கம் வாங்குவோர், வருமான வரி கணக்கு எண்ணை ("பான்' கார்டு) தெரிவிப்பதற்கான நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கி குழு பரிந்துரைத்து உள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது.


சேமிப்பு திட்டங்கள்:இக்குழு, ரிசர்வ் வங்கிக்கு அளித்த அறிக்கை விவரம்:அளவிற்கு மீறி, தங்கம் இறக்குமதியானால், அவற்றை வங்கிகள் இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதிக்கலாம்.வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம், ஒருவர், தங்கத்தின் பேரில் ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் கடன் வாங்க வரும் பட்சத்தில், அவரிடமிருந்து,"பான்' கார்டு நகலை பெறலாம்.


வங்கி சாரா நிறுவனங்களின் சொத்துக்கள், வாங்கும் கடன்கள், கிளைகள் வழங்கும் தங்க நகை கடன்கள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.மக்கள், தங்க கட்டிகள், நாணயங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு பதிலாக, தங்கம் சார்ந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து, பரிசீலிக்கலாம்.


தங்க வங்கி:தனி நபர்களிடம், 20 ஆயிரம் டன் தங்கம் தேங்கியுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த தங்கத்தை வெளிக்கொணர்வதன் மூலம், தங்க இறக்குமதியை ஓரளவு கட்டுப்படுத்தலாம். இதற்காக, தனி நபர்கள் தங்கத்தை வாங்கவும், விற்கவும் வசதி கொண்ட, தங்க வங்கியை அமைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.வங்கிகள், தங்கம் வாங்குவதில் உள்ள இடர்பாட்டை எதிர்கொள்ளும் பொருட்டு, அவற்றுக்கு முன்பேர சந்தையில் வர்த்தகம் புரியவும் அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த தங்கத்திற்கான தேவையில், 80 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. மொத்த தங்கம் இறக்குமதியில், வங்கிகளின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது.


பற்றாக்குறை:தங்கம் இறக்குமதி அதிகரித்து வருவதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது, வரும் காலாண்டுகளில் 5.6 சதவீதமாக உயரும்பட்சத்தில், அது உச்சபட்ச நிலையாக கருதப்பட்டு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டுப்பாடுகள் :குறிப்பாக, ரிசர்வ் வங்கி, வங்கி களின் தங்க இறக்குமதிக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் என, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், அதன் மீதான சுங்க வரியை, 4 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.