தேடல்

வரும் 2050ல் உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசு இந்தியா: ஆய்வில் தகவல்

புதுடில்லி: வரும் 2050ல் உலகின் மிகப்பெரிய மூன்று பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

லண்டனை தலைமையகமாகக் கொண்ட பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (பி.டபிள்யு. சி.,)என்ற நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2050ம் ஆண்டில் உலகின் பொருளாதார மையமாக, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா விளங்கும். அதையடுத்து அமெரிக்காவும், மூன்றாவது நாடாக இந்தியாவும் இருக்கும். நான்காவது இடத்தை, ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரேசில் பிடிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவும் தங்களது பொருளாதார வல்லமையை இழக்கத் துவங்கும். ஆச்சர்யமாக, ஐரோப்பிய நாடுகள் தங்களின் துன்பம் என ஒதுக்கி வரும் துருக்கி, வரும் 2050ம் ஆண்டில் ஐரோப்பாவிலேயே மிகவும் பொருளாதார வல்லமை கொண்ட நாடாக மாறும் என அந்த அறிக்கை கூறுகிறது.

பி.டபிள்யு. சி., ஆய்வறிக்கையின்படி, வரும் 2020க்குள் இ-7 நாடுகள் என்றழைக்கப்படும், சீனா, ரஷ்யா, இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள், உலகின் பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவை உள்ளடக்கிய ஜி 7 நாடுகளை பின்னுக்கு தள்ளிவிடும் என கூறப்பட்டுள்ளது. அதே போல், 2050ல் சீனா உலக பொருளாதார வல்லரசாகவும், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்குப் பிறகு, மிகவும் அதிக இடைவெளியில் பிரேசிலும் பொருளாதார வல்லமை பெற்ற நாடாக விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த இடத்தை அடைவதற்கு தற்போது வளர்ந்து வரும் நாடுகள் மிகவும் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள பி.டபிள்யு. சி., இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அதன் நிதிப்பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறியுள்ளது. ரஷ்யா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் தங்களது பெட்ரோல் வளத்தையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டும் என்றும், இத்தகைய மாற்றங்கள் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.