தேடல்

வறட்சியால் தீவனப்பயிர்களுக்கு தட்டுப்பாடு:விலையும் விர்ர்...

உடுமலை:வறட்சியால் தீவனப்பயிர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வைக்கோல் மற்றும் மக்காச்சோள தட்டு விலையும் கிடு.. கிடு.. வென உயர்ந்து வருகிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் மட்டுமல்லாது வைக்கோல், மக்காச்சோள தட்டு ஆகியவற்றை தீவனமாக கால்நடை வளர்ப்போர் அளித்து வந்தனர்.வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாததால் உடுமலை பகுதியில் மக்காச்சோள சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது. மானவாரியாக பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் போதுமான அளவு வளராமல் கருகியது. இதனால், மக்காச்சோள தட்டுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதேபோல், அமராவதி அணை ஒரு முறை கூட நிரம்பாததால் இப்பகுதியில் நெல் சாகுபடி கைவிடப்பட்டது. இதனால், இந்தாண்டு வைக்கோலுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆனைமலை, வைகை அணை பாசனப்பகுதிகளிலிருந்து வைக்கோலை வாங்க கால்நடை வளர்ப்போர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வைக்கோல் விலை ஒரு லாரி லோடு 2, 500 ரூபாயிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளதால், கால்நடை வளர்ப்போர் வைக்கோல் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். தீவனப்பயிர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மாடுகளை விற்க வேண்டிய நிலைக்கு கால்நடை வளர்ப்போர் தள்ளப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக பால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.