தேடல்

விண்வெளி மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பேர் கைது

திருநெல்வேலி:. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐ.எஸ்.ஆர்.ஓ.,) கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை தளம்,நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நாகர்கோவிலை அடுத்துள்ள தேரேகால்புதூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் 25, என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராகபணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் தந்தை ஜெயசிங் 52. ஓமன் நாட்டில், அரசு போக்குவரத்து துறையில் மெக்கானிக்காக பணியாற்றிவருகிறார். அண்மையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். இவர் நேற்று மகேந்திரகிரி ராக்கெட் மையத்தை சுற்றிபார்க்க சென்றிருந்தார். மருமகன் கிருஷ்ணகுமார் அங்கு வேலைபார்ப்பதால், அவரது நண்பரான திரவியம் என்ற காண்ட்ராக்டர் மூலம் அங்கு வேலை செய்வது போல தொழிலாளருக்கு உரிய அடையாள அட்டை பெற்றார். பின்னர் உள்ளே சென்றார். அங்கு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் ஜெயசிங்கை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அவர் முன்னுக்கு பின்னாக தகவல்களை கூறியதால் அவரை பணகுடி போலீசில் ஒப்படைத்தனர். சுற்றிப்பார்க்க வந்திருந்தாலும் விண்வெளி ஆய்வு மையத்தின் ரகசிய பகுதிக்கு சென்றதால், அங்கு பணியாற்றிய கிருஷ்ணகுமார், அவரது மாமனார் ஜெயசிங், காண்ட்ராக்டர் திரவியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ராக்கெட் மையத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, தவறான அடையாள அட்டை காண்பித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.