தேடல்

வினோத் ராய் மீது காங்கிரஸ் காட்டம்

புதுடில்லி: சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., ஆகியவை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக கூறிய, மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைமை அதிகாரி வினோத் ராய்க்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலம் குர்கானில் உலக பொருளாதார அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய வினோத் ராய், மத்திய அரசு முடிவெடுப்பதில் தைரியமில்லாமல் செயல்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும், சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., ஆகியவை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி, அரசு துணிவில்லாமல் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள வினோத் ராய், 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை நடந்த மத்திய அரசிலும் பொறுப்பில் இருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு அந்த கால கட்டத்திற்கும் பொருந்துமானால், துணிவில்லாமல் நடந்து கொண்டதான குற்றச்சாட்டு அவருக்கும் பொருந்தும் என கூறியுள்ளார். மேலும், இதுகுறித்த கருத்து தெரிவித்த திக்விஜய் சிங், வினோத் ராயின் மேலான கருத்துக்கு நன்றி என கிண்டலடித்துள்ளார்.