தேடல்

விற்பனை அரிசியை வாங்க நிர்பந்தம்ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு

விருதுநகர்: விற்பனை அரிசியை வாங்க ,விருதுநகர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் நிர்பந்தம் செய்ய,ரேஷன்கடைகாரர்கள் மறுத்ததால், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் நகர்வு நிறுத்தப்பட்டு, பொருட்கள் வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் நிலையில், குறைந்த விலைக்கு தரமான அரிசி வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
இதில் முதல் தரம் கிலோ 35 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலைக்கு விற்பனை செய்யும் அரிசியை, தேவைப்பட்டால் மட்டுமே, நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வழங்க வேண்டும். ஆனால், அரிசி அதிகமாக இருப்பதால், அரிசியை கண்டிப்பாக வாங்க வேண்டும் என, நுகர் பொருள் வாணிப கிடங்கில் உள்ள அதிகாரிகள்,ரேஷன் கடையினரை வலியுறுத்துகின்றனர். இந்த அரிசி ,இலவசமாக வழங்கப்படும் அரிசி போல், தரமில்லாமல் இருப்பதால், ரேஷன் கடையினர் எடுக்க மறுக்கின்றனர்.இந்த அரிசியை எடுத்தால்தான், மற்ற பொருட்களான பாமாயில், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்க முடியும் என,விருதுநகர் சூலக்கரை பகுதியில் உள்ள நுகர் பொருள் வாணிப கிடங்கு அதிகாரிகள் கூறினர். இதனால், ஜன.,18 மற்றும் 19ல், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் நகர்வு செய்வது நிறுத்தப்பட்டது. இதனால்,ரேஷன் கடை பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னை குறித்து, நுகர் பொருள் வாணிப கிடங்கு விருதுநகர் மண்டல மேலாளர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் வசந்தி, கூட்டுறவுத்துறை பொது வினியோகத் திட்ட துணைப்பதிவாளர் ஜீனு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, பொருட்களை நகர்வு செய்ய, நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.மாவட்ட வழங்கல் அலுவலர் வசந்தி கூறுகையில், நுகர் பொருள் வாணிப கிடங்கில், விற்பனை அரிசி அதிகமாக இருப்பதால், ரேஷன் கடைக்காரர்களை எடுக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். இதன் காரணமாக பிரச்னை ஏற்பட, அதிகாரிகள் சமரசம் பேரில், நாளை (ஜன.,21) முதல் பொருட்கள் நகர்வு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.