தேடல்

வெள்ளை அறிக்கை கேட்கிறார் கருணாநிதி

சென்னை:மின்வெட்டு பிரச்னை குறித்து, தமிழக அரசு, வெள்ளை அறிக்கை அளிக்க முன் வருமா என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கேள்வி எழுப்பிஉள்ளார்.
அவரது அறிக்கை:
மின்துறை அமைச்சர் பேசுகையில், ஜூன் மாதத்திற்கு பின், மின் தட்டுப்பாடு என்பது வானத்தில் இருக்கலாம். தமிழகத்தில்
இருக்காது என்றார்.
ஆனால், தமிழக முதல்வரோ, கடந்த ஆண்டு, கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கையில், தற்போதுள்ள, 3 மணி நேர, மின்வெட்டை, 2 மணி நேரமாகக் குறைப்போம், 2011ம் ஆண்டு, ஜூலை முதலே, தமிழகத்தில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்றார்.
அதே முதல்வர், கடந்த மாதம் கூறுகையில், 2013ம் ஆண்டு இறுதிக்குள், மின் பற்றாக்குறை தீர்க்கப்படும் என, கூறியிருக்கிறார். முதல்வர் கூறியது உண்மையா? அமைச்சர் கூறியது உண்மையா?
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய, முன்னாள் தலைவர் கபிலன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில், மின்சாரத் தேவையில், தன்னிறைவு பெற்ற மாநிலமாக, தமிழகம் விளங்கும் என, கூறியிருக்கிறார். முதல்வர் கூறியது உண்மையா? மூத்த அதிகாரி கூறியது உண்மையா?
தமிழகத்திலே, மின்வெட்டுப் பிரச்னை எப்போதும் நீங்கும்? கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் துவங்கப்பட்ட மின்திட்டங்கள் குறித்த,உண்மை விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், அரசு வெள்ளை அறிக்கையை, அளித்திட முன் வருமா?
இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.