தேடல்

விஸ்வரூபம் விவகாரம்! பேசத்தயாராக இருக்கிறோம்! அபிராமி ராமநாதன்

விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக நாங்கள் பேச தயாராக இருக்கிறோம் எங்களை அழைத்து பேசுங்கள் என்று அபிராமி ராமநாதன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக இயக்கி, நடித்து, தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.ல் வெளியிட உள்ளார். இதற்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும், தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமல் இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவரது விஸ்வரூபம் உள்ளிட்ட இனி வருங்காலங்களில் அவரது எல்லா படங்களையும் புறக்கணிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் கமல் தமது முடிவில் உறுதியாக இருக்கிறார். அதேபோல் தியேட்டர் உரிமையாளர்களும் தங்களது எதிர்ப்பில் பிடிவாதமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றியம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் கேயார், சமீபகாலமாக சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது. 2012-ல் சுமார் 140க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இதில் வெற்றி பெற்றது 8 படங்கள் மட்டுமே. அதுமட்டுமின்றி 2012ம் ஆண்டில் 62 படங்கள் தணிக்கை செய்யப்பட்டு திரையிட முடியாமல் கிடப்பில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இப்போது விஸ்வரூபம் படம் விஸ்வரூபமாக கிளம்பியுள்ளது. அப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்னையை வளரவிடாமல், சீக்கிரம் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்று அபிராமி ராமநாதனை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதற்குபின்னர் பேசிய அபிராமி ராமநாதன், சிறு முதலீட்டு படங்களை நம்பித்தான் தியேட்டர் உரிமையாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். டி.டி.எச். பிரச்னையை பேசி தீர்க்கலாம் என்று கேயார் கூறுகிறார். ஆனால் யாரை அழைத்தார்கள், டி.டி.எச்.-ல் ஒளி்ப்பரப்புவர்களை கூப்பிட்டார்கள். நாங்கள் பேச தயாராக இருக்கிறோம் எங்களை அழைத்து பேசுங்கள் கண்டிப்பாக வருகிறோம் என்றார்.