தேடல்

ஷரபோவா சாதனை வெற்றி *அரையிறுதிக்கு முன்னேறினார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபனில் அசத்துகிறார் ரஷ்யாவின் மரியா ஷரபோவா. இதுவரை 9 கேம்களை மட்டும் இழந்த இவர், புதிய சாதனையுடன் அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் நம்பர்-2 வீராங்கனையான ஷரபோவா, சக வீராங்கனை எகடரினா மகரோவாவை சந்தித்தார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷரபோவா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கடந்த 5 சுற்றில் குறைந்த கேம்களை(9) இழந்து, அரையிறுதிக்கு முன்னேறிய இவர், 22 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். முன்னதாக 1991ல் அமெரிக்காவின் மோனிகா செலஸ் 12 கேம்களை இழந்து அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.மற்றொரு போட்டியில் சீனாவின் லீ நா, போலந்தின் ரத்வன்ஸ்காவை 7-5, 6-3 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஜோகோவிச் முன்னேற்றம்:ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் நம்பர்-1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், செக் குடியரசின் தாமஸ் பெர்டிக்கை சந்தித்தார். இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் முதல் செட்டை 6-1 என வென்றார். இரண்டாவது செட்டை பெர்டிக் 6-4 என வென்று பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஜோகோவிச் அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-4 என வென்றார். முடிவில், ஜோகோவிச் 6-1, 4-6, 6-1, 6-4 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் டேவிட் பெரர், சக வீரர் நிகோலஸ் அல்மாக்ரோவை 4-6, 4-6, 7-5, 7-6, 6-2 என்ற செட்களில் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதியில் பூபதி ஜோடிகலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பூபதி, ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா ஜோடி, ஜிமோன்ஜிக்(செர்பியா), கேத்தரினாவை(சுலோவாக்கியா) 3-6, 6-2, 10-5 என வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது.* மற்றோரு கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜர்மிளா, மாத்யூ ஜோடியிடம் 3-6, 2-6 என்ற நேர் செட்கணக்கில் வீழ்ந்தது.