தேடல்

ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி

புதுடில்லி:தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட, தேசிய ப”மைத் தீர்ப்பாயம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நான்கு உறுப்பினர் குழு மேற்பார்வையில், தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தொழிற்பேட்டை:தூத்துக்குடி நகருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ள தொழிற்பேட்டையில், ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை இயங்கி வந்தது. கடந்த, மே மாதம், 23ம் தேதி, இந்த ஆலையிலிருந்து, நச்சு வாயு வெளியேறியதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

இதையடுத்து, 29ம் தேதி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆலை நிர்வாகம் சார்பில், தமிழக பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. அங்கும், ஆலையை மூட உத்தரவிடப்பட்டது.இதையடுத்து, தேசிய ப”மை தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு, நீதிபதி சுதந்திரகுமார் தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது; நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆலையை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கிய நீதிபதி, தன் உத்தரவில் கூறியதாவது:

ஆதாரம் இல்லை:ஆலையிலிருந்து நச்சுவாயு கசிந்தது என, வெறுமனே கூறப்பட்ட புகாருக்காக, பெரிய தொழிற் சாலையை இழுத்து மூட உத்தரவிட முடியாது. ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததற்கான, விஞ்ஞானப்பூர்வ சான்று எதுவும் இல்லை.மேலும், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தான் நச்சுவாயு வெளியேறியது என்பதும் உறுதி செய்யப் படவில்லை. ஏனெனில், அந்த ஆலை அமைந்துள்ள பகுதி தொழிற்பேட்டை; அனல் மின் நிலையம் உட்பட, ஏராளமான தொழிற்சாலைகள் அங்கு உள்ளன.

நச்சு வாயு வெளியானதாக கூறப்பட்ட நாளுக்கும், ஆலையை மூட உத்தரவிட்ட நாளுக்கும் இடையே, ஆறு நாட்கள் உள்ளன. அந்த ஆறு நாட்களும் ஆலையை இயங்க அனுமதித்த பிறகு தான், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், மூட உத்தரவிட்டுள்ளது; அதில், பல சந்தேகங்கள் உள்ளன.நச்சு வாயு கசிந்ததாக கூறிய கிராமங்கள், ஆலையிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ளன. உண்மையில் நச்சு வாயு கசிந்திருந்தால், ஆலையில் வேலை பார்த்தவர்கள், சுற்றி இருந்தவர்கள் தான் பாதிக்கப்பட்டிருப்பர்.

எனவே, சென்னை பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே அமைத்த, நான்கு பேர் குழு மேற்பார்வையில், ஆலை தொடர்ந்து செயல்பட உத்தரவிடப்படுகிறது. ஆலையில் இருந்து உண்மையிலேயே அபாயகரமான மாசு வாயு வெளியேறுகிறதா என்பதை, இக்குழு ஆய்வு செய்யும். ஆலை தொடர்ந்து செயல்பட எவ்வித தடையும் இல்லை.இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறியிருந்தார்.

நான்கு உறுப்பினர் குழுவில், மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர், தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் உறுப்பினர் அல்லது பொறியாளர், சென்னை, ஐ.ஐ.டி.,யின் இரண்டு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ள னர்.