தேடல்

ஹாக்கி லீக்: பாகிஸ்தான் வீரர்கள் அவுட்

புதுடில்லி: சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடரில் இடம் பெற்ற 9 பாகிஸ்தான் வீரர்களும் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் போல, உள்ளூர் ஹாக்கி அணிகள் பங்கேற்கும், முதலாவது ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் தற்போது நடக்கிறது. இதில், பாகிஸ்தானை சேர்ந்த 9 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இவர்களில் ரஷித் முகமது, பரீத் அகமது, இம்ரான் பட், முகமது தவுசீக் என அதிகபட்சமாக நான்கு பேர் மும்பை மேஜிசியன்ஸ் அணியில் இடம் பெற்றனர். டில்லி வேவ் ரைடர்ஸ் அணியில் முகமது ரிஸ்வான், பஞ்சாப் வாரியர்ஸ் அணியில் காஷிப் ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.இந்நிலையில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை, பாகிஸ்தான் படையினர் கொடூரமான முறையில் கொன்றதை தொடர்ந்து, அந்நாட்டு ஹாக்கி வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. மும்பையில் பயிற்சியில் ஈடுபட்ட போது, மைதானத்திற்கு வெளியே சிவசேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பயிற்சி ரத்து செய்யப்பட்டது. பின் டில்லியில் நடந்த டில்லி வேவ்ரைடர்ஸ், பஞ்சாப் வாரியர்ஸ் அணிகள் இடையிலான போட்டியின் போது இந்து யுவக் சபா அமைப்பை சேர்ந்த இருவர், மைதானத்தில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.இப்படி பிரச்னை பெரிதாக, பாகிஸ்தான் வீரர்களை அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.இது குறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச் செயலர் நரேந்தர் பத்ரா கூறுகையில்,தற்போதைய பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் வீரர்களை திருப்பி அனுப்ப முடிவு செய்தோம். இம்முடிவை ஹாக்கி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்புகள் சேர்ந்து ஒருமனதாக எடுத்தன. பாகிஸ்தான் வீரர்களுக்கு ஒப்பந்த தொகை முழுமையாக வழங்கப்படும். சம்பந்தப்பட்ட அணிகள், மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்,என்றார்.